ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் வேலாயுதம் வெளியாகியிருக்கிறது. தலயா, தளபதியா என்ற போட்டி ஒருபுறமிருக்க சூர்யாவும் விஜய்யும் களத்தில் குதித்திருக்கிருக்கின்றனர். தொடர்ச்சியாக ஆக்ஷன் படங்களைத் தந்த விஜய், காவலன் வெற்றி மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அதன்பிறகு தயாரிக்கப்பட்ட வேலாயுதம் பற்றிய பரபரப்பான செய்திகள்,கட்டுக்கதைகள் வெளியாகிய போதிலும் அவை அனைத்துக்கும் வேலாயுதம் பதில் கொடுத்துள்ளது எனலாம்.அரசியல் ரீதியாக விஜய் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் தென்னிந்திய ஆட்சி மாற்றத்தின் பின்னர் வெளியாகியுள்ள விஜய்யின் முதலாவது திரைப்படம் என்பதாலும் அஜீத்தின் மங்காத்தா மாபெரும் வசூல் மழையைக் கொட்டி சாதனை படைத்திருந்ததாலும் வேலாயுதம் மீதான எதிர்பார்ப்பு பலமடங்காகியிருந்தது.ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜாவின் இயக்கத்தில், விஜய் என்டனியின் இசையமைப்பில் இளைய தளபதியுடன் ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா, சந்தானம் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறது.
ஊடகத்துறையில் வெறும் செய்தி வெளியிடுவது மாத்திரமல்லாமல் சமுதாயத்துக்காக சாதிக்க வேண்டும் என்ற நோக்கோடு அந்தத் துறையில் தனது நண்பர்களுடன் துணிவோடு இறங்குகிறார் ஜெனிலியா.சென்னையை நிர்மூலமாக்க வேண்டும் என்ற பாரிய திட்டத்தோடு செயற்படும் வில்லன்கள் ஜெனிலியாவின் நண்பர்களைக் கொன்றுவிட ஜெனிலியா மட்டும் தப்பிக்கொள்கிறார். இவர்களது திட்டத்தை முறியடிக்கவும் வில்லன்களைக் கொல்லவும் முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டு ஒரு தாளில் எழுதி வைத்துவிட்டு என்ன பெயர் எழுதலாம் என்று யோசிக்கிறார். அந்த நேரத்தில் அருகேயுள்ள முருகன் கோயிலைப் பார்த்ததும் உதிக்கிறது வேலாயுதம் என்ற பெயர்.
முடிவில் வேலாயுதம் என எழுதுகிறார் ஜெனிலியா. மறுநாள் யார் இந்த வேலாயுதம் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்துகிறது.இந்நிலையில் வேலாயுதம் என்ற பெயரோடு கிராமத்து மக்களின் மைந்தனாக தனது ஊரில் வலம் வருகிறார் விஜய். அவரது முறைப்பெண் ஹன்சிகா. அண்ணன் - தங்கை பாசத்தோடு அப்பாவியாக இருக்கும் விஜய், தங்கையின் கல்யாணத் தேவைக்காக சென்னைக்கு வருகிறார்.
அங்கு ஆலயத்தில் அர்ச்சகரிடம் இவருடைய பெயரைச்சொல்ல, கதை மறுபக்கம் பயணிக்கத் தொடங்குகிறது.இதேவேளையில், தற்செயலாக விஜய் செய்யும் சில விடயங்கள், வில்லன்கள் வைத்திருந்த குண்டுகளை அடையாளம் காண உதவுகின்றன.இந்நிலையில் தனது தங்கையின் கல்யாணத்துக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீட்டு நிறுவனத்தினர் மோசடி செய்துவிடுகிறார்கள். தன்போன்று மேலும் பலர் பாதிக்கப்பட்டதை நினைத்து வேதனைப்படுகிறார் விஜய்.மறுபுறத்தில் யார் இந்த வேலாயுதம் என அறிந்துகொள்வதற்காக ஊடகங்களும் பொதுமக்களும் பாதுகாப்புத் தரப்பினரும் அதீத ஆர்வத்தில் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இறுதியில் விஜய், ஜெனிலியா குறிப்பிட்ட வேலாயுதமாக மாறுகிறாரா? வில்லன்களை எப்படிக் கண்டுபிடிக்கிறார்? தங்கையின் திருமணம் நடைபெறுகிறதா? விஜய் மீது கண் வைத்திருக்கும் ஜெனிலியா, ஹன்சிகாவில் யாரைத் திருமணம் செய்கிறார்? என்பதே கதை. படத்தின் முதல்பாதி முழுவதும் சுவாரஸ்யமான சிரிப்போடு நகர்கிறது. ஓடும் ரயிலில் பாய்ந்து வந்து ஏறும் விஜயின் முதல் காட்சியைப் பார்த்தவுடன் வழமையாக காற்றில் பறந்துவந்து வில்லன்களைத் துவம்சம் செய்யும் விஜய் தான் மீண்டும் வந்திருக்கிறார் என நினைக்கத் தோன்றும்.எனினும் கொஞ்சம் காட்சி நகர்கையில் சுவாரஸ்யம் தொடர்கிறது.
விஜய், தன்னுடைய தங்கையின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக செய்யும் வேலைகள் அனைத்துமே திரையரங்கை அதிரவைக்கும் அளவுக்கு சிரிப்பொலியை ஏற்படுத்துகின்றன.
அடுத்ததாக சந்தானத்தின் பங்கு திரைப்படத்தின் தரத்தை தூக்கி நிறுத்துகிறது எனலாம். அலட்டல் இல்லத நடிப்போடு அரங்கத்தையே அதிர வைக்கிறார் சந்தானம்.விஜய் அரசியலில் காலடி வைத்துள்ளதை அல்லது அவரது எதிர்கால இலட்சியங்களை அவரது வசனங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. மக்களை சிந்திக்கத் தூண்டும் வசனங்களைக் கச்சிதமாகப் பேசுகிறார். ஜெனிலியாவின் முன்னைய திரைப்படங்களை விட நடிப்பில் குறையிருப்பதாகவே தெரிகிறது. சத்தமாகப் பேசும் வசனங்களில்கூட உதடுகளின் அசைவு குறைவாகவே இருக்கிறது. ஹன்சிகாவைக் கொஞ்சம் பாராட்டலாம்.
பாடல்கள் சில ரசிக்கும்படியாக உள்ளன.மாயம் செய்தாயோ... என்ற பாடல், சொன்னா புரியாது... சொல்லுக்குள்ள அடங்காது... என்ற அறிமுகப்பாடல், ரத்தத்தின் ரத்தமே..என் இனிய உடன்பிறப்பே.. ஆகிய பாடல்கள் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றன.சூரியனே தேவையில்ல வித்துவிடலாமா? ராத்திரிய மட்டும் இங்க வச்சிக்கலாமா? என்ற வரிகள் ஒலிக்கையில் கைதட்டல் கூடுகிறது.விஜய் ரசிகர்களுக்காகவே எழுதப்பட்டவை எனச் சொல்லக்கூடிய வரிகளுக்கும் அவ்வாறே பாராட்டைப் பெறுகின்றன.
திரைப்படத்தின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கலாம் என்பதை ஊகிக்க முடிந்தாலும் கூட காட்சிகளில் எவ்வாறு வித்தியாசமாகக் காட்டப்படுகிறது என்பதில் எதிர்பார்ப்பு அதிகமாகிறது.க்ளைமேக்ஸ் காட்சிகளில் விஜய் தன் பங்கைச் சரியாகச் செய்கிறார். ஆயினும் சண்டைக் காட்சிகளில் சில யதார்த்தத்துக்குப் பொருத்தமாக அமையவில்லை என்றே கூறலாம். விஜய் குதிரையில் பயணிக்கும் சில காட்சிகளும் அதனை வெளிப்படுத்துகின்றன.மாபெரும் நட்சத்திரப்பட்டாளங்களை வேலாயுதம் கொண்டிருக்கிறது. இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட ஏனைய அனைவருமே தமது பங்கினை திருப்தி தரக்கூடிய வகையில் செய்திருக்கிறார்கள்.விஜய்யின் ஆக்ஷன், நகைச்சுவைகளை விரும்பும் ரசிகர் கூட்டத்துக்கு வேலாயுதம் நல்லதொரு தீபாவளிப் பரிசுதான். வித்தியாசமான கதையை விரும்புபவர்கள் கொஞ்சம் மனம் நோகத்தான் செய்வார்கள்.எவ்வாறாயினும் திரைப்படத்தின் நகைச்சுவையும் உணர்வுகளைத் தூண்டும் கதைவசனமும் மனதில் நிலைக்கின்றன.
நன்றி - வீரகேசரி
0 comments:
Post a Comment